காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் சாராய கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு காரைக்காலில் இருந்து காரில் பாண்டி சாராயம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட மதுவிலக்குபிரிவு டிஎஸ்பி லாமேக் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், தலைமை காவலர்கள் கரிகாலன், மகாலிங்கம், செந்தில்குமார், சிஐயூ கண்ணதாசன் ஆகியோர் செம்பனார்கோவில் காளகஸ்தினாதபுரம் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த காரை நிறுத்தியபோது நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்று போலீசார் மடக்கினர். காரை நிறுத்திய ஓட்டுநர் தப்பி ஓடினார். போலீசார் காரை சோதனை செய்ததில் 18 சாக்குமூட்டைகளில் 900 லிட்டர் பாண்டி சாராயத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக காரையும் சாரயத்தையும் பறிமுதல் செய்து காரில் இருந்த மற்றொரு நபரையும் தப்பி ஓடிய நபரையும் விரட்டி பிடித்து மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் சாராயம் கடத்தியவர்கள் ஆயப்பாடியை சேர்ந்த டிரைவர் சுமன், திருக்களாச்சேரியை சேர்ந்த முருகேசன் என்பது தெரிய வந்தது. இருவரும் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாரயத்தை கடத்தி வந்தவுடன் சாராய வியாபாரி தங்களை தொடர்பு கொண்டு சாராயத்தை பெற்று செல்வார் என்று தெரிவித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சாராய வியாபாரி யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.