கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கோவிலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜுபைர் அலி (75). குடும்ப பிரச்னை காரணமாக 2023-ஆம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறியவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இதுகுறித்து, ஜுபைர் அலியின் தூரத்து உறவினரான கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கோவிலாம்பட்டியை சேர்ந்த முகமது அலி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நேரில் வந்து உயிரிழந்தது ஜுபைர் அலி என்பதை உறுதிப்படுத்தினார்.
அதேசமயம் ஜுபைர் அலியின் உடலை கொண்டு செல்ல யாரும் முன்வராததால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் முன்வந்து அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கூறைநாடு பி.எம்.பாஸித் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் முதியவரின் உடலை நல்லடக்கம் செய்தனர். மயிலாடுதுறை ஹாஜியார் நகர் தக்வா பள்ளிவாசலில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் பள்ளிவாசல் ஜமாத்தார் முகம்மது லியாஸ் துஆ ஓதி முதியவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.