மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் சிவன் கோயில் கீழ வீதியை சேர்ந்தவர் சுபலெட்சுமி(19). சிறு வயது முதல் மருத்துவர் கனவுடனேயே வளர்ந்து வந்த சுபலட்சுமி, கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவுடன், தனது கனவை மெய்ப்படுத்த நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் பெற்ற மதிப்பெண்கள் 513. சுபலெட்சுமியின் தந்தை வேலை பார்ப்பதோ ஒரு சாதாரண பூக்கடையில். சுபலட்சுமியை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சக மாணவ – மாணவிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட பூக்கடை தொழிலாளியின் மகளான சுபலெட்சுமி தன் கனவை விட்டுவிட்டு வேறு படிப்பில் சேர முடியாமலும், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு பொருளாதாரம் இடம் தராததாலும், என்ன செய்வது என்று தெரியாமல் கவலை அடைந்து வீட்டுக்குள் முடங்கி விடாமல், உடனடியாக முடிவெடுத்து அடுத்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்கிறேன் என்று கூறி சோகத்தில் மூழ்கி இருந்த தனது பெற்றோரை தேற்றி உள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக ஆன்லைன் மூலம் நீட் பயிற்சிக்கு பணம் கட்டி சேர்ந்து வீட்டில் இருந்தபடியே இரவு பகலாக படித்துள்ளார் சுபலெட்சுமி. அதன் விளைவாக தற்போது வெளியான நீட் தேர்வு முடிவில் சுபலெட்சுமி 639 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது அகில இந்திய அளவில் 39,836-வது இடம் மற்றும் ஓபிசி ரேங்கில் 18,342-வது இடமும் ஆகும். இதை இடத்திற்கு நிச்சயமாக அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் சுபலெட்சுமி. நீட் தேர்வு இருந்ததால் மட்டுமே தனது மருத்துவர் கனவு சாத்தியமானது என மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுபலட்சுமி தன்னம்பிக்கையுடன் படித்தால் அனைவரும் மருத்துவராகலாம் என சக மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.