காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொல்லப்பட்ட சம்பவத்தில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் வளையாபதி, அ.தி.மு.க. பிரமுகர் பிரபு, ஆகியோர் கைது செய்யப்பட்டு, காவலர் குடியிருப்பில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த விவகாரம், சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங்ராஜா ஆகியோர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது.
அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரேசன் விசாரித்து, மாநில மனித உரிமைகள் கமிஷனுக்கு சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கை அரசுக்கு பாதகமாக அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கை எல்லாம், அரசுக்கு பாதகமாக இருப்பதால், இடம் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசன் மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பியாக இன்று மதுவிலக்கு டிஎஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். தொடர்ந்து, அவர் எஸ்.பி.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.