மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. இதுவரை 5 பேர் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஒருவருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு உள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவினை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகளை மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்ட அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சை பிரிவினை ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காலநிலை மாறுவதால் எல்லா இடங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 102 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் 18 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு மட்டும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 30 படுக்கை வசதிகள் உள்ளது. அதேபோல், சீர்காழியில் 2 பேருக்கு காய்ச்சல் மட்டும் அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பு இல்லை. இதுவரை இம்மாவட்டத்தில் 5 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் டெங்கு தொடர்பாக உயிர் இழப்புகள் ஏதும் இல்லை. டெங்கு பாதிப்புகளை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். ஆய்வின்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன் கந்தையா, மயிலாடுதுறை மாவட்ட அரசு பெரியார் தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.