மயிலாடுதுறையில் சமுதாயக் கல்லூரி மாணவிகளுக்கு தீயணைப்புத்துறையின் சார்பில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு செயல்விளக்கம். கேஸ் சிலிண்டர் தீ பிடித்தால் அணைக்கும் முறை நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, எண்ணெய் வகை தீயை அணைக்கும் முறை குறித்து விளக்கம் அளித்தனர்.
மயிலாடுதுறை தீயணைப்புத்துறை சார்பில் சமுதாயக் கல்லூரி மாணவிகளுக்கு தீத்தடுப்பு முறை குறித்த செயல்விளக்க பயிற்சி தீயணைப்புத்துறை நிலைய வளாகத்தில் அளிக்கப்பட்டது. தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் முதலுதவி அளிக்கும் முறை, நீரில் மூழ்கியவருக்கு அளிக்கப்படும் முதலுதவி, நீரில் மூழ்கியவரை எவ்வாறு மீட்பது, இயற்கை இடர்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது, தீ பரவாமல் தடுப்பது, எண்ணெய் வகையால் ஏற்படும் தீயை எவ்வாறு அழிப்பது, போம் என்ற ரசாயன நுரை தண்ணீருடன் சேர்த்து பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற விரைவில் தீப்பிடிக்கும் பகுதியில் பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் சிசிசி சமுதாயக் கல்லூரியைச் சேர்ந்த நர்சிங் மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.