சீர்காழி நகராட்சி மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி சார்பில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சி மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்புரை ஆற்றினார்.
டெங்கு விழிப்புணர்வு பேரணியை நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு வழிமுறைகள் குறித்து மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர்.
பேரணியில் நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம், மேலாளர் லதா, நகராட்சி களப்பணி மேற்பார்வையாளர் சீதாலட்சுமி, கல்லூரி துணை முதல்வர்கள், போக்குவரத்து காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.