மயிலாடுதுறை அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்காக கட்டப்பட்ட சிமெண்ட் களத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர கோரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர்மக்கள் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாந்தை கிராமத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதற்கான சிமெண்ட் களம் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டது. மேலும் நிரந்தர கட்டிடத்திற்கு எஸ் ஆர் எம் அலுவலகத்திலிருந்து அனுமதியும் வழங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த 12 நபருக்கு பட்டா வழங்க கோரி குத்தாலம் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த இடத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் அது களத்து புறம்போக்கு என்று ஊராட்சி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் தனியார் வசம் இருக்கும் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று மாந்தை ஊராட்சி மன்ற தலைவி சசிகலா திருமுருகன் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் அருகில் உள்ள இரண்டு ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலத்தை நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.