தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் கிராமத்தில் ரூ.6.83 கோடி செலவில் அலைத்தடுப்பு சுவர் மற்றும் மீன் இறங்குதளம் அமைப்பதற்கான பூமி பூஜையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவர் கிராமம் அமைந்துள்ளது. இந்த மீனவர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தில் கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கரையில் படகுகளை நிறுத்த முடியாத நிலைமை உண்டானது கரை அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை ஏற்று தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஆறு கோடியே 83 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கரையில் கருங்கல் கொட்டி தடுப்புச் சுவர் அமைக்கப்படுவதுடன் மீன் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று குட்டியாண்டியூர் கடற்கரையில் நடைபெற்றது. மீன்வளத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.