நீர் மோர் பந்தல்களை அமைப்பதோடு மட்டுமல்லாமல் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமான முறையில் செயல்படுவதை உறுதி செய்து நீர்மோர் வழங்க வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சில தினங்களுக்கு வெப்ப அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர்மோர், தண்ணீர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும் வகையில் மயிலாடுதுறை நகரில் மக்கள் அதிகம் கூடும் இடமாக பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜ் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மேலும், நீர் மோர் பந்தல்களை அமைப்பதோடு மட்டுமல்லாமல் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமான முறையில் செயல்படுவதை உறுதி செய்து நீர்மோர் வழங்க வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கேட்டுக்கொண்டார். இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் கோமல் அன்பரசன், முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் என கட்சி நிர்வாகிகள் பல உடன் இருந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ள நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.