மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் இரண்டாவது மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன் – கலைவாணி தம்பதியினரின் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தனசேகரன் – கலைவாணி தம்பதியினருக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் அறுபதாம் கல்யாணம் நடைபெற்றது.
இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி திருக்கடையூர் வருகை தந்தனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் சௌமியா தம்பதியினருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் கோயில் உள்துறை செயலாளர் விருத்தகிரி வரவேற்பு அளித்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலச நீர் கொண்டு சஷ்டியப்த பூர்த்தி விழா தம்பதியினருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தம்பதியினருக்கு அன்புமணி ராமதாஸ் மனைவி, மகள் குடும்பத்தினருடன் கலச அபிஷேகம் செய்தார். தொடர்ந்து மாலை, வைபவம் மற்றும் மாங்கல்ய தாரான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தம்பதியினரை வாழ்த்திய அன்புமணி ராமதாஸ் சவுமியா அன்புமணி, சவுமியாவின் தந்தை முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் சன்னதிகளை சுற்றி வந்து கள்ளவாரன பிள்ளையார், அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்தனர். உறவினர் நிகழ்ச்சி என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.