ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 69-ஆம் ஆண்டு அமுது படையல்:- பிள்ளைக்கறி அமுது படைக்கும் ஐதீகத் திருவிழாவை முன்னிட்டு சீராளன் திருவுருவம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா

செய்திகள்

மயிலாடுதுறை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 69-ஆம் ஆண்டு அமுது படையல்:- சிறுத்தொண்டர் நாயனார் இறைவனுக்கு சீராளன் பிள்ளைக்கறி அமுது படைக்கும் ஐதீகத் திருவிழாவை முன்னிட்டு சீராளன் திருவுருவம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா, ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்:-

சிவபக்தரான சிறுத்தொண்டரின் பக்தியை சோதிக்க அவரிடம் சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டதாகவும், அதன்படி சிறுத்தொண்டரும் இறைவனுக்கு  பிள்ளைக்கறி அமுது படைத்ததாகவும் ஐதீகம். இந்த ஐதீகத்தை நினைவுகூறும் வகையில் மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத்தெருவில் உள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 69-வது ஆண்டு சிறுத்தொண்டர் அமுது படையல் விழா நடைபெற்றது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோயிலில் சித்திரை மாத பரணி நட்சத்திர தினத்தில் வழங்கப்படும் சீராளன் அருள்பிரசாதம் பெற்று உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழாவையொட்டி இரவு ஐந்து வகை மாவுகளால் உருவாக்கப்பட்ட சீராளன் திருவுருவத்தை மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளச்செய்து அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை செய்து வீதியுலா நடைபெற்றது.

விடியவிடிய நடைபெற்ற இந்த வீதியுலா முடிவில் சிறுத்தொண்டர் வரலாறு நிகழ்ச்சி நடைபெற்று  சீராளன் பிரசாதம் அதிகாலை 4 மணிக்கு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.  இதையொட்டி, வீதியுலாவாக கொண்டு வரப்பட்ட, 5 வகை மாவினால் உருவாக்கப்பட்ட சீராளன் உருவத்தை கோயிலுக்கு எடுத்துவந்து, அதனை வெட்டி சமைத்து இறைவனுக்கு படைத்தனர். அதனை, ஏராளமான பக்தர்களும், குழந்தைபேறு வேண்டி இளம்பெண்கள் பலரும் வாங்கி உண்டனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *