மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவை மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்கம் மற்றும் ப.பா.சி இணைந்து நடத்தின. விழாவை, மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா.எம்.முருகன், கூடுதல் ஆட்சியர் ஷபீர்ஆலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் தொடக்கி வைத்து, புத்தக அரங்களில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை விளக்கும் திட்டவிளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, நடைபெற்ற தொடக்க விழாவில், புத்தகத்திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கூப்பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வானவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்த புத்தகத் திருவிழாவில், தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்களின் 80 புத்தக விற்பனை அரங்குகள், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறியும் வகையில் திட்டவிளக்க கண்காட்சி அரங்குகளும் இடம் பெற்றுள்ளது. மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பொதுஅறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளத் தேவையான புத்தகங்களும், வாசிப்பாளர்களுக்கான புத்தகங்களும் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மண்ணின் மைந்தர் எழுதிய புகழ்பெற்ற நாவல்களுக்கு தனி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. தினமும் புகழ்பெற்ற 20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவில், தினந்தோறும் பரிசு கூப்பன் வழங்கப்பட்டு, குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.