மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தற்போது சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. குத்தாலம் அருகே தேரடி என்ற பகுதியில் உள்ள வளைவில் அடிக்கடி சாலை விபத்து நேரிடுவதால் அங்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த வேகத்தை தற்போது நடைபெற்ற சாலை விரிவாக்கப்பணியின் காரணமாக அகற்றப்பட்டது. சாலைப் பணிகள் நிறைவுற்றதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் வேகமாக கடந்து செல்கின்றனர். தற்போது, அங்கு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி அங்கு சிறுசிறு சாலை விபத்துகள் நேரிடுவது வாடிக்கையாகியுள்ளது.
நேற்று அவ்வழியாக தமிழரசன் என்ற 15 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் குத்தாலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரில் வந்த அரசு பேருந்து அதிவேகமாக சாலையை வலதுபுறம் வளைத்து கடக்க முயற்சித்தபோது, சுரேஷ் ஓட்டிவந்த வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், சிறுவன் தமிழரசன் பேருந்தின் மூன் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட தில் அவரது இரண்டு கால்களும் சிராய்ப்பு அடைந்து சதை தேய்த்து படுகாயம் அடைந்து மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வாகனத்தை ஓட்டிச்சென்ற சுரேஷூம் காலில் காயமடைந்தார். இதன் சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியுள்ளது. இதுபோன்று அடிக்கடி நேரிடும் சாலை விபத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக அப்பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.