திருச்சியில் கடந்து சில நாட்களுக்கு முன்பு நகர பேருந்தின் இருக்கை பெயர்ந்து பேருந்தின் வெளியே விழுந்து நடத்துனர் காயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இதைத்தொடர்ந்து அரசு பேருந்துகளின் பராமரிப்பு மோசமாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து அரசு பேருந்துகளிலும் 48 மணி நேரத்துக்குள் முழுமையான ஆய்வு நடத்த தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா உத்தரவிட்டார். அந்தவகையில் மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் 3 மாற்றுப் பேருந்துகள் உள்ளிட்ட 73 பேருந்துகளிலும் நேற்று முதல் சோதனை நடத்தப்பட்டது.
கும்பகோணம் துணை மேலாளர் (சிவில்) ராஜேந்திரன், மயிலாடுதுறை பணிமனை மேலாளர் எஸ்.வடிவேல் ஆகியோர் பணிகளை ஆய்வு செய்தனர். இதேபோல், சீர்காழி பணிமனையில் இருந்து இயக்கப்படும் 41 பேருந்துகள், பொறையார் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 26 பேருந்துகள் என மொத்தம் 140-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் முழுமையாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.