மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் தைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆசித் மனைவி ரஹ்மத் நிஷா(30). இவர் தனது குழந்தையுடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பி உள்ளார். மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தின் படிக்கட்டில் ஏறியபோது, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய மர்மநபர் ரஹ்மத் நிஷாவின் கைக்குழந்தையின் கழுத்தில் அணிவித்திருந்த 1 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிந்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சங்கிலியை பறித்து சென்றது திருவாரூர் மாவட்டம் மாங்குடி கூடூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கணேசமூர்த்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து, கணேசமூர்த்தியை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.