இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் தீமிதித்து பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செய்திகள்

மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தீக்குழியில் தவறவிட்ட தீச்சட்டியை ஒருவர் தீக்குழியில் நின்று எடுக்க முயற்சித்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள், நூற்றுக்கணக்கானோர் தீமிதித்து பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்:-

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற இலுப்பைத்தோப்பு  சின்ன மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 17-ஆம் தேதி பூச்சொரிதல், காப்பு கட்டுதல் உடன் தொடங்கி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வீதியுலா நடைபெற்றது. இன்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி கரகம் மற்றும் விரதம் இருந்து காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள், அலகு காவடி எடுத்த பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக கோயிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து தீச்சட்டி ஏந்தி தீ மிதித்த ஒருவர் கையில் ஏந்தி வந்த தீச்சட்டியை தீக்குழியில் தவறவிட்டார். உடனடியாக சற்றும் யோசிக்காமல் தீக்குழியில் நின்று கீழே விழுந்த தீச்சட்டியை மீண்டும் எடுக்க முயற்சித்த காட்சிகள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தீக்குழியில் தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர்.

மேலும் 16 அடி நீள அலகு குத்தியும் பக்தர்களும் தீக்குழியில் நடந்து சென்று தீ மிதித்தது காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விண்ணை முட்டும் கண்கவர் வாணவேடிக்கை பக்தர்களை பரவசபடுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *