மயிலாடுதுறையில் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி மயங்கிக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நகராட்சி பூங்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு:- பூங்காவில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தும் மாணவர்கள் பூங்கா உள்ளிட்ட ஒதுக்குப்புறமான இடங்களில் போதையில் மயங்கிக் கிடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்களே பூங்காவுக்கு வந்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்ற சம்பவங்களும் அரங்கேறின. இந்நிலையில், மயிலாடுதுறையில் இன்று டெங்கு ஒழிப்புப் பணி குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு மையத்தில் அமைந்துள்ள வரதாச்சாரியார் நகராட்சி பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பூங்காவில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரிகளை புறக்கணித்து, சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அழைத்து அறிவுரை கூறிய மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட போலீசாரை அழைத்து, பூங்கா உள்ளிட்ட மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் தினசரி ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தினார்.