சீர்காழி அருகே ரூபாய் 42.65 லட்சம் செலவில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் கீழமாத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 42.65 லட்சம் செலவில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற கட்டடம், கிராம நிர்வாக அலுவலக கட்டடம், நூலக கட்டடம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கீழமாத்தூர் அங்கன்வாடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள குழந்தைகளிடம் கல்வி மற்றும் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது தரமான சுவையான உணவுகள் வழங்கப்படுவதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமையல் செய்பவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர் மாணவர்களின் கல்வித்திறனை பாராட்டியதுடன் ஆசிரியர்களையும் பாராட்டினார். ஓலயாம்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளியில் கட்டுமான பணியை பார்வையிட்டார். அங்கு கல்வி மற்றும் மதிய உணவு குறித்து கேட்டறிந்தார். அப்போது மாணவர்களுக்காக தயாரான உணவை சாப்பிட்டு ஆய்வு செய்ததுடன் அனைத்து அதிகாரிகளையும் சாப்பிட சொல்லி தரம் சுவை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி, ரெஜினா ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.