மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது. இன்று அதிகாலை 5.30 மணியிலிருந்து மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆய்வை தொடங்கினார். குத்தாலம் பேரூராட்சி, மக்கும் குப்பை, மக்கா குப்பை உரக்கிடங்கு, மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்ப்புத்திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட பெரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கோட்டாட்சியர் யுரேகா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.