மயிலாடுதுறை தாலுக்கா சோழம்பேட்டை ஊராட்சியில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவிகள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகள் என மொத்தம் 11 பேருக்கு பொன்னாடை போர்த்தி புத்தகங்களை பரிசாக வழங்கிப் பேசியதாவது.
இப்பள்ளி ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்களின் குழந்தைகள் அனைவரும் நல்ல கல்வி பெறவேண்டும் என்பதற்காக உண்டு உறைவிடப் பள்ளியாக கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்வி வழங்குவதோடு நிறுத்திவிடாமல், அவர்களுக்குள் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து அதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும். இப்பள்ளியில் 2024 -2025 ஆம் கல்வியாண்டிற்க்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக பயிலும் மாணவ – மாணவிகள் தேர்வு செய்து அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் சேர்க்கப்படுவதால், ஏற்கனவே சிறப்பாக பயிலும் மாணவர்களின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டல் மற்றும் அவர்களின் திறமைகளும் வளர்க்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.