மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தருமபுர ஆதீனத்தின் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா வருகிற மே 20-ஆம் தேதி கொடியேற்ற உற்சவத்துடன் துவங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பதினோராம் நாள் திருவிழா மே 30-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருள பக்தர்கள் தூக்கிச் செல்லும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கு மனிதனை மனிதன் சுமப்பதா? என திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என கருதி பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த தகவலறிந்த மதுரை ஆதீனம் தானே நேரில் சென்று பட்டணபிரவேசத்தில் பல்லக்கை சுமப்பேன் என அறிவித்தார். அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலையும் பல்லக்கை தானும் சுமக்கவுள்ளதாக அறிவித்தார். இப்படி எதிப்புகள் அதிகரித்ததால் ஆதீன நிர்வாகத்திடம் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதத்தை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் உடனடியாக பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டணபிரவேச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இதனிடையே கடந்த ஆண்டு எவ்வித எதிர்ப்பும் இன்றி அமைதியாக பட்டணபிரவேசம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.