மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீனத்திருமடம் அமைந்துள்ளது. இங்கு பழைமைவாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கடந்த 20-ஆம் தேதி பத்து நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
பொதுமக்கள் சீர்வரிசை எடுத்துவர தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முறைப்படி தருமபுரம், அச்சுதராயபுரம், மூங்கில்தோட்டம், கருங்குயில்நாதன்பேட்டை, கீழிருப்பு ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த கிராம நாட்டாமைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வெற்றிலை, பாக்கு பணம் வைத்து தருமபுரம் ஆதீனகர்த்தர் வழங்கினார். தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வடை பாயசத்துடன் திருமண விருந்து நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனகர்த்தர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.