மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மிசா.பி.மதிவாணனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திமுக கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் 1973-இல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், பின்னர் செம்பனார்கோவில் ஒன்றியக் கழகத்தின் பொறுப்பாளராக பணியாற்றியவர். பின்னர் தலைமைச் செயற்குழு உறுப்பினர், விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை திமுகவில் வகித்தவர். 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், மிசா காலக்கட்டத்தில் ஓராண்டு சிறைவாசமும் அனுபவித்த திமுக போராளியான இவர் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தொடர்ச்சியாக 23-ஆண்டுகள் பணியாற்றி முப்பெரும் விழாவை மூன்று நாட்கள் நடத்திப் பெருமை சேர்த்தவர்.
இவர் செய்த பெரும்பணிகளுக்கான அங்கீகாரமாக, பெரியார் விருது பெற்ற மிசா மதிவாணன் கடந்த ஆண்டு இயற்கை எய்தினார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. மிசா மதிவாணன் உருவப்படத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ வழங்கி சிறப்புரை ஆற்றினார்.