தமிழகத்தில் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டதில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. அந்த ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதிதேர்வு வெற்றிபெற்ற ஆசிரியர் நலச்சங்கம் என்று அமைத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். மீண்டும் தகுதிதேர்வுகள் வைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியில் டெட் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று கூறியும் அதனை நிறைவேற்றாததால் ஏமாற்றம் அடைந்த ஆசிரியர்கள் பாராளுமன்ற தேர்தலுக்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு ஓட்டுகேடடு வாருங்கள் என்று ஆங்காங்கே போர்கொடி தூக்கியுள்ளனர்.
இன்று மயிலாடுதுறையில் டெட் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் தங்கள் குடும்பத்துடன் சட்டசபை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசாணை 149ஐ ரத்து செய்யாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக பதாகைகளுடன் ஆசிரியைகள் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கச்சேரி சாலையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர். இது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லதான் முடியும் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறி திமுகவினர் அனுப்பி வைத்தனர்.