கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகள் மாயம். வங்கி செயலாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பி தராமல் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அலைக்கழித்து வருவதால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கடன் சங்கம் உள்ளது. இங்கு 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 52 பேர் தங்களது நகையை அடகு வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைகடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கடன் சங்கத்தில் நகைகடன் தள்ளுபடி சலுகை பெற்ற விவசாயிகள் மற்றும் சலுகை பெறாத விவசாயிகள் நகைகளை திருப்பி கேட்போது நகைகளை தராமல் அலைக்கழித்துள்ளனர்.
இதனால் விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து வங்கியில் அடகு வைத்த நகைகளை அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து விசாரணை செய்த கூட்டுறவு துறை, மாவட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன் முறைகேட்டில் ஈடுபட்ட கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கடன் சங்க செயலாளர் பிரதீப் என்பரை சஸ்பென்ட் செய்தார்.
விசாரணை அதிகாரியாக கூட்டுறவு துறை சார்பதிவாளர் மணிகண்டன் என்பவரை நியமித்தார். ஒருசிலருக்கு நகை வழங்கப்பட்ட நிலையில் 26 விவசாயிகளின் 100 பவுன் நகை திருப்பி வழங்கப்படவில்லை. விவசாயிகளின் நகை அடகு வைத்த அடமான சீட்டை பெற்று வைத்து கொண்டு நடவடிக்கை எடுப்பதாக எழுத்துபூர்வமாக மணிகண்டன் உறுதியளித்து இரண்டு வருடங்கள் கடந்தும் கடன் தள்ளுபடி சலுகை பெற்ற விவசாயிகள் மற்றும் சலுகை பெறாத விவசாயிகள் நகையை வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 17 விவசாயிகள் தங்கள் நகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகையை வங்கி தராததால் பல விவசாயிகளின் பிள்ளைகளுடைய திருமணம் தடைபட்டுள்ளதாகவும், நகையை மீட்டு தராவிட்டால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
தங்களின் நகைகளை கொடுப்பதற்கு எந்த வித உத்தரவாதமும் அளிக்காமல் கூட்டுறவு அதிகாரிகள் விவசாயிகளை தவிக்க விடுவதாகவும், கஞ்சாநகரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ள நிலையில் லஞ்சம் பெற்றுகொண்டு நடவடிக்கை எடுக்காமல் கூட்டுறவுதுறை அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.