விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு. இதுவரை கொடுத்த புகார் மனுக்களை தோரணமாக கட்டி கையில் கருப்பு கொடிகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. வடக்கு தெற்காக அமையும் இந்த புறவழிச்சாலை காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மழைக் காலங்களில் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்படும் என்றும் இதன் காரணமாக மேலமங்கநல்லூர், கழனிவாசல் வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2000 ஏக்கர் விலை நிலங்கள் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அப்புறப்படுத்தக்கூடிய நிலைமை உருவாகி உள்ளதாகவும் இதனை தவிர்க்க புறவழிச் சாலையை முழுவதுமாக பாலமாக கட்டி தர வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று கோரியும் பொதுமக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை இல்லை என்று கூறி இதுவரை அளிக்கப்பட்ட மனுக்களின் நகல்களை தோரணமாக கட்டி கையில் கருப்புக்கொடியுடன் கழனிவாசல் வயல்வெளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.