டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான குருவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆள் பற்றாக்குறையால் இயந்திர நடவுக்காக பாய் நாற்றங்கால் விதைவிடும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு உள்ளதாகவும் மும்முனை மின்சாரம் வழங்காத மின்வாரியத் துறையை கண்டித்தும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் 500 ஏக்கரில் விவசாயிகள் குருவை சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில் தொடர் மின்வெட்டால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் பிரச்சினை ஏற்படுவதாக குற்றம்சாட்டியும், தடையில்லா மின்சாரம் வழங்க கோரியும், கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் மின்வாரியத்துறையை கண்டித்து சோழம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூவலூர் பகுதியில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி மற்றும் காவல் ஆய்வாளர் சுப்ரியா, மின்வாரியத் துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக மின்வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்போராட்டம் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் நடைபெற்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.