மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கிய மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தி மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர். ஆனால் மின்சார துறையால் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. 3 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை என்று கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் அறிவித்தனர்.
நேற்று மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகளுக்கு உரிய தீர்வு வழங்காததால் இன்று மயிலாடுதுறை நகரம் கால்டெக்ஸ் பகுதியில் பூம்புகார், சிதம்பரம் செல்லக்கூடிய சாலையின் மையப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரியும், விவசாய பணிகளுக்கு அரசு அறிவித்த மும்முனை மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதற்கு போராட்டக் குழுவினர் உடன்படாததைத் தொடர்ந்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் பகலில் ஆறு மணி நேரம் இரவில் ஆறு மணி நேரம் என நாளொன்றுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதாக எழுத்து பூர்வமாக அளித்த உறுதி மொழியினை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.