மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உணவு பாதுகாப்பு துறையும், மாவட்ட சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய சிறுதானிய உணவுத் திருவிழா; நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்த சிறு தானிய உணவு பதார்த்தங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு சிறந்த தயாரிப்புகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழக அரசு சிறுதானிய உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதேபோல் மாவட்ட நிர்வாகமும் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் தனியார் கல்லூரியில் இன்று சிறுதானிய உணவு திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் இக்கல்லூரியின் மாணவிகள் கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வரிசையாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
இதனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு, சாப்பிட்டு பார்த்து சிறந்த சிறுதானிய உணவு பதார்த்தங்களை உருவாக்கிய மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். இதில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் குடியரசு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தாதேவி, ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.