ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ண பாரதி, கடுமையான ஜாதி கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலேயே தன்னுடைய ஒப்பற்ற தமிழ் இசை காவியமாகிய நந்தனார் சரித்திரத்திற்கு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த நந்தன் என்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து புரட்சிகரமான மாறுதல் செய்தவர். பன்மொழி புலவர்களுடன் தொடர்புகொண்டு அந்தந்த மொழி இசையையும் கற்ற இவர், வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்தார்.
மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை சந்திக்க திருவையாறு சென்ற இடத்தில் ‘சபாபதிக்கு வேறு தெய்வம்” என்ற பாடலை இயற்றியுள்ளார். உ.வே.சாமிநாத ஐயரின் இசை குருவானவர். சிவனையே பாடி வந்த இவர் 1896-ஆம் ஆண்டு தமது 86-வது வயதில் சிவராத்திரியன்று சிவபதம் எய்தினார். இவரது ஆராதனை தினம் ஆண்டுதோறும் இசைவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை வள்ளலார் கோயில் என்றழைக்கப்படும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் கோபாலகிருஷ்ண பாரதியின் 36-வது ஆண்டு இசைவிழா கடந்த 9-ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற்ற வருகிறது.
இரண்டாம் நாளான இன்று மதுரை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவ – மாணவிகளின் பரதம், வீணைக்கச்சேரியில் முடிகொண்டான் ரமேஷ், சௌமியா ஆகியோர் நிகழ்த்திய வீணைக்கச்சேரியும், ரோஜா கண்ணன் குழுவினரின் நந்தனார் சரித்திரம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளால் ஆராதனை செய்யப்பட்டது.