மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா எடமணல் கிராமத்தைச் சேர்ந்த மாஸ்கோ மனைவி கலைமணி, வருசைபத்து கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் மனைவி சுதா, ராதாநல்லூரைச் சேர்ந்த சதீஸ், சஞ்சீவிராயன்கோயில் கிராமத்தைச் சேர்ந்த கதிர்பாலன் ஆகியோர் படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் உள்ளிட்ட 20 பேரிடம், எடமணல் ஆமைப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் சபேசன் மனைவி பரமேஸ்வரி மற்றும் அவரது சகோதரி திருவெண்காடு சின்னப்பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி சுமதி ஆகியோர் தங்கள் உறவினரான அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் பிரபு என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், அவர் மூலமாக சத்துணவு அமைப்பாளர், ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலக உதவியாளர் பணிகளை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
அவர்களது பேச்சை நம்பி இவர்களும் அரசு வேலை ஆசையில் 2022-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தந்துள்ளனர். அதன் பின்னர் பணம் பெற்றவர்கள் முறையாக பதில் சொல்லாததோடு, வேலை வாங்கித் தருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
சீர்காழி பகுதியில் பலரிடம் இதேபோல் மோசடி நடைபெற்றுள்ளதை அறிந்த கலைமணி, பரமேஸ்வரன் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சீர்காழி காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலைலையில், பாதிக்கப்பட்ட நபர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அப்போது, அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர