தரங்கம்பாடி அருகே அதிமுக சார்பில் இதயங்களை இணைக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. மும்மத்தினர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு வைத்தல், புனித ரமலான் மாதம் தொடங்கி நோன்பு கடைபிடித்து வருகின்றனர், அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி ஊராட்சியில் அதிமுக சார்பில் இதயங்களை இணைக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தமிமுல் அன்சாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இதில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என மும்மத்தினர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பேரிச்சம்பழம், பழம் வகைகள் மற்றும் நோன்பு கஞ்சி அருந்தி, நோன்பு திறந்தனர். மேலும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.