புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்க்கு அதிக அளவில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் சென்றுள்ளது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டார். இதையடுத்து, மயிலாடுதுறை, கூறைநாடு அருணா பெட்ரோல் பங்க் அருகில் ஸ்கார்ப்பியோ சொகுசு கார் வேகமாக சென்றதையடுத்து, ரோந்து போலீஸார் அந்த வாகனத்தை விரட்டியவாறு பின் தொடர்ந்தனர். ஆனால் தீடிரென போலீஸாரின் பார்வையில் இருந்து கார் தப்பியது. தொடர்ந்து தப்பிச் சென்ற காரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடைசியாக அந்த கார் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கார் ஸ்டாண்டு ஒன்றில் நிறுத்தப்பட்டிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த காரை சோதனை செய்ததில் அதில் 7 மூட்டைகளில் 550 லிட்டர் பாண்டி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று காவல் ஆய்வாளர் சுப்ரியா வசம் ஒப்படைத்தனர். மேலும், விசாரணையில் சாராயம் கடத்தி வந்தது தூக்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் கார் டிரைவரான மணிகண்டன் என்பதும் தெரியவந்து. காரை ஸ்டாண்டில் விட்டுவிட்டு தப்பி சென்ற இருவரையும் போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.