டெல்டா மாவட்டத்தின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் பம்புசெட் நீரை கொண்டு நடப்பாண்டுக்கான குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை தாலுகா கொற்கை, தாழஞ்சேரி, ஐவநல்லூர், வரகடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யகின்றனர். தற்போது இப்பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் விதைவிடும் பணிகளில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, ஏக்கருக்கு 30 கிலோ எடையுள்ள விதை நெல் மூட்டை 1200 ரூபாய்க்கு வாங்கி வயலில் பாய், நாற்றங்கால் தயார் படுத்துதல், விதைவிடுதல் என ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து பணியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாய்நாற்றங்காளில் விதைவிட்டு ஒருசில நாட்களில் பாய்நாற்றுவிடப்பட்ட வயல்களில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் புகுந்து நெல் முளைப்பதற்கு முன்பே அதனை சேதப்படுத்தி வருவதாகவும், இதனால் நெற்பயிர்கள் முளைக்காமல் வீணாகி போவதாகவும், நடவு செய்வதற்கு பயன்படுத்த முடியாமல் போவதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், மின்தடை, விவசாய பணிக்கான ஆட்கள் பற்றாக்குறை, இயற்கை இடர்பாடுகள் என்று பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் நிலையில் தற்போது காட்டு பன்றிகளின் அட்டூழியம் அதிகமாக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு சென்று அங்கு மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வலைகளை வாங்கி வந்து நாற்றங்களை சுற்றி அடைத்து வைத்தும், இரவு நேரங்களில் வயல்களில் லைட்டுகளை கட்டியும் தூக்கத்தை இழந்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட சிரமப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உடனடியாக இந்த காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் சென்று காட்டுப்பன்றியால் பாதிக்கப்பட்ட நாற்றாங்கால்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.