மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பூச்சொரிதல் புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழாவானது தொடங்கியது. முன்னதாக அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பின்னர் கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு அடுத்த ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் திருவிழாவும் பிறகு தெப்பத் திருவிழா, உதிர்வாய் துடைப்பு உற்சவம் மற்றும் மஞ்சள் நீர் உற்சவமானது நடைபெற உள்ளது. மேலும் இன்று நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.