மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கீழத்தெருவில் அருள்மிகு கல்யாண மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் தீமிதி திருவிழா கடந்த 20-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. பின்னர் பத்தாம் நாள் நிகழ்வான இன்று தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு விக்ரமன் ஆற்றங்கரையிலிருந்து மேளம் வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சக்தி கரகம் மற்றும் 16 அடி நீளம் கொண்ட அலகு காவடியுடன் தீமிதித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.