மயிலாடுதுறை அருகே வரதாச்சாரியார் தெருவில் சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 35-ஆம் ஆண்டு கரக உற்சவ தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் இருந்து சக்தி கரகம் மேளதாள வாத்தியங்கள் முழங்க காளி ஆட்டங்களுடன் புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் முலைப்பாளியை சுமந்தும் மிகபிரமாணடமான அலகுகளை வாயில் குத்தியும், பெண்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகுகுத்தியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து பெண் பக்தர் அலகினை குத்தி தீமிதித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. நிறைவாக 40 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட அலகினை குத்தி பக்தர் ஒருவர் மேல வாத்தியத்திற்கு ஏற்ப பக்தி பரவசத்துடன் நடனமாடி தீமிதித்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.