மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் தீமிதி திருவிழாவின் நிறைவு நாளான இன்று கும்பு பூசை என்று அழைக்கப்படுகின்ற விடையாற்றி திருவிழா இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் முன்பு மாரியம்மன், திருப்பதி வெங்கடாஜலபதி, விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளின் வண்ண மின் விளக்கு தட்டிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் காஞ்சி காமாட்சியாக பரிவார தெய்வங்களான காத்தவராயன் கருப்பண்ணசாமியுடன் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேளதாள வாத்தியங்கள் இன்னிசை கச்சேரியுடன் சிறுவர்கள் இளைஞர்களின் பக்தி பரவச ஆட்டத்துடன் கண்கவர் வான வேடிக்கைகள் முழங்க நடைபெற்ற ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வீதி உலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். கிராமத்தின் பல்வேறு வீதிகளின் வழியாக விடிய விடிய ஊர்வலம் நடைபெற்று சுவாமி ஆலயம் வந்தடைந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.