உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற திருவீதியுலாவில் வீடுகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு

செய்திகள்

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற திருவீதியுலாவில் வீடுகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வன முல்லைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தேவாரத் தலமாக இக்கோவில் திகழ்கிறது. இந்த கோவிலின் சித்திரை பெருவிழா கடந்த 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் இரண்டு தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரதவீதிகளில் தேரில் வலம்வந்த பஞ்சமூர்த்திகளுக்கு பொதுமக்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 23-ம் தேதி காலை நடராஜர் புறப்பாடும், மதியம் பஞ்சமூர்த்திகள் காவிரி தீர்த்தப்படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *