மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், சகோபுர தரிசனம், திருக்கல்யாணம், திருத்தேர் உற்சவம் ஆகிய உற்சவங்கள் நடந்தேறின. இந்நிலையில் வைகாசி விசாகப் பெருவிழாவின் சிகர உற்சவமான தெப்ப திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி அம்பாள் உற்சவ மூர்த்திகள், கோயில் பிரம்ம தீர்த்தத்தில் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து திருவாடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகாதீபாராதனை காட்டப்பட்டு, தெப்பம் பிரம்ம தீர்த்தத்தை மூன்று முறை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.