தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யராஜ், ஆரோக்கிய செல்வி தம்பதியினர். இவர்களது பட்டதாரியான 23 வயதான இளைய மகள் ஜெனிபர். இவரும் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவர்களது உறவினரான சவுரிராஜ் – இருதயமேரி தம்பதியினரின் மகன் மார்ட்டின் ராஜ் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மார்ட்டின் ராஜ் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை முடிந்து ஊருக்கு செல்வதற்கு முன் மார்ட்டின் ராஜிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று மார்ட்டின் ராஜ் குடும்பத்தினர் ஜெனிபர் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது மூத்த மகள் திருமணம் ஆகாமல் இருக்கும் போது இளைய மகளுக்கு திருமணம் செய்ய ஆட்சேபனை தெரிவித்தனர்.
மார்ட்டின் ராஜ் குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த நிலையில் பத்து நாட்கள் மட்டுமே மணப்பெண்ணுடன் குடும்பம் நடத்திய மார்ட்டின் ராஜ் விடுமுறை முடிந்த காரணத்தினால் மீண்டும் வெளிநாட்டுக்கே வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜெனிபரின் அக்காவும், திவ்யராஜ் – ஆரோக்கிய செல்வி தம்பதியின் மூத்த மகளுக்கு நேற்று பருத்தியூர் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு ஜெனிபர், அவரது மாமியார் இருதய மேரி, நாத்தனார் வென்சியா மேரி ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்த மாமியாரும், நாத்தனாரும் அங்கேயே கடும் சண்டையிட்டு ஜெனிபரை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெனிபர் அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர் உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என கேட்டு தகராறு செய்வதாக தொலைபேசியில் தெரிவித்த போது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த ஜெனிபரின் தாயார் தங்கள் மகனை ஜெனிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஜெனிபர் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெனிபரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் சம்வம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் ஜெனிபரின் சாவுக்கு காரணமான அவரது மாமியார் இருதயமேரியை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி கோட்டாட்சியர்அர்ச்சனா மற்றும் பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவல்லி உள்ளிட்ட போலிசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஜெனிபரின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர்.