மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சக்தி புரீசுவரசுவாமி கோவிலைச் சேர்ந்த பழமைவாய்ந்த அருள்மிகு பூர்ணம்பாள் புஷ்களாம்பாள் உடனாகிய அய்யனார் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் செய்வதற்காக கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு 11-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகாபூர்ணஹூதி நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மல்லாரி வாத்தியங்கள் இசை முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.