மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு கேட்டு தலைவர் ராகுல்காந்திக்கு மூத்த நிர்வாகிகள் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும், நிச்சயம் தனக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மயிலாடுதுறை தொகுதியின் மாப்பிள்ளையான தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சி அலுவலகம் தொடங்கியுள்ளேன். ராகுல்காந்தியை சார்ந்தவர்களுக்கு தொகுதி வழங்கப்பட உள்ளதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மயிலாடுதுறை தொகுதி காங். கட்சிக்கு ஒதுக்கீடு செய்யவில்லை என்றாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு கூட்டணி கட்சிக்கு பணியாற்றுவேன். தொகுதிக்கு தொடர்பில்லாத வெளி ஆட்களை இங்கு அனுமதிக்கமாட்டோம். அப்படி அவர்களை வேட்பாளர்களாக போட்டால் வெற்றிவாய்ப்பு பாதிக்கும். கட்சிக்கு சமீபத்தில் வந்தவர்களை வேட்பாளராக அனுமதிக்க மாட்டோம் என்றார்.