மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், இஸ்ரேல் அரசை கண்டித்து இனப்படுகொலையை உடனே நிறுத்த வலியுறுத்தியும் பாலஸ்தீனத்தை பாதுகாத்திட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு இஸ்ரேலை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, காஸா, ரஃபா உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் மனித தன்மையற்ற தாக்குதலை உடனே நிறுத்த வலியுறுத்தியும், இஸ்ரேல் அரசு உடனடியாக போர்நிறுத்தம் செய்திடவும், சுயேச்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்கிட நடவடிக்கை எடுக்கவும், மோடி அரசு இஸ்ரேல் நாட்டுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.