மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கேசவன் 49. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆன இவருக்கு சொந்தமான செம்பதனிருப்பு கிராமத்தில் உள்ள இடத்தில் புதிய வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடியபொழுது பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்து உள்ளது. அதனை தேடியபொழுது கேசவன் வீட்டு வளாகத்தில் பயன்படுத்தப்படாத செப்டிக் டேங்கில் எலும்புக்கூடுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அளித்த தகவல்களின் பேரில் பாகசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட போது செம்பதனிருப்பு கிராமத்தில் உள்ள கேசவன் புதிய வீட்டின் வளாகத்தில் உள்ள பயன்படுத்தப்படாத செப்டிக் டேங்கில் புடவையுடன் கூடிய எலும்புக்கூடுகள் கிடந்தது தெரிய வந்தது. இதனை கண்ட பாகசாலை போலீசார் அவற்றை பாதுகாத்து இன்று தஞ்சையில் இருந்து தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தி எலும்புக்கூடுகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.