மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடை (பாய் வீட்டு கல்யாண பிரியாணி கடை) ஒன்றில் கடந்த 31 ஆம் தேதி நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா, நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அவர்களை ஆய்வு செய்யவிடாமல் தடுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பிருந்தா, முருகராஜ் இருவரும் கடையின் உரிமையாளர் உள்ளிட்ட ஊழியர்களால் தாக்குதலுக்கு உள்ளாகினர். இவ்விவகாரம் தொடர்பாக சுகாதார ஆய்வாளர் பிருந்தா அளித்த புகாரின் பேரில்ஆபாசமாக பேசுதல், பொது ஊழியரை தடுத்து காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் கடை உரிமையாளர் அஃபில், அமர், செபாஸ்டின் மற்றும் சிலர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பிரியாணி கடைக்கு சீல்வைக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் அனைத்து நிலை ஊழியர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் என 400 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கடை நிர்வாகி அஃபில், செபாஸ்டின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமர் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாததால் மூன்றாவது நாளாக தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறை பேருந்து நிலையம், மருத்துவமனை சாலை, வண்டிகாரதெரு, காந்திஜிரோடு, பட்டமங்கலம் தெரு, கச்சேரி சாலை, முதலியார் தெரு உள்ளிட்ட நகராட்சி 36 வார்டு பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. நகராட்சி ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக பணிக்கு செல்லாததால் ஆங்காங்கே உள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் குப்பைகளில் வீசப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் ஈக்கள் மொய்க்க ஆரம்பித்து துர்நாற்றங்கள் வீச தொடங்கியுள்ளது.
இது மட்டுமின்றி வணிக நிறுவனங்களில் குப்பைகள் மூட்டை மூட்டையாக கட்டப்பட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. பழக்கடைகளில் தினசரி சென்று அழுகிய பழங்களை துப்புரவு பணியாளர்கள் குப்பை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். தற்பொழுது அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அழுகிய பழங்களை வியாபாரிகள் ஆங்காங்கே சாலைகளின் ஓரத்தில் வைத்துள்ளதால் சாலையை கடக்கும் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஊழியர்கள் இன்னும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளின் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும்.