மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் வைகாசி மாத பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினார். மேளவாத்தியங்கள் முழங்க தருமபுர ஆதீன கர்த்தர் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரிஷபகொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் 11 நாட்களும் பட்டணபிரவேச பெருவிழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மே 26 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜையும், 28-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும், 29 ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
30 ஆம் தேதி இரவு தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கொலுக்காட்சி நடைபெறும். இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கு மனிதனை மனிதன் சுமப்பதா? என திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என கருதி அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். இதனால் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகவலறிந்த மதுரை ஆதீனம் தானே நேரில் சென்று பட்டிணப்பிரவேசத்தில் பல்லக்கை சுமப்பேன் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலையும் பல்லக்கை சுமக்கவுள்ளதாக அறிவித்தனர். இப்படி எதிர்ப்புகள் அதிகரித்ததால் கோட்டாட்சியர் உடனே பட்டணப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி அளித்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டிணப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இதனிடையே கடந்த ஆண்டு எவ்வித எதிர்ப்பும் இன்றி அமைதியாக பட்டினபிரவேசம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.