மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களில் 5-வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான இங்கு வலதுபுரம் சீதை, லஷ்மணன், அனுமன் முதலானோருடன் கோயில் கொண்டருளும் ஸ்ரீ ராமபிரானுக்கு ஶ்ரீராமர் உற்சவம் கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கு உற்சவம் இன்று நடைபெற்றது. காலை ஶ்ரீபெருமாள், ஶ்ரீராமபிரான் திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு பரிமள ரங்கநாதர் ராஜஅலங்காரத்திலும், ஶ்ரீராமர் சீதை, லஷ்மணன், ஆகியோர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல வண்ண மலர்களால் ஆன புஷ்ப பள்ளக்கில் எழுந்தருள செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்று மேளதாள வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதிகளில் புஷ்ப பல்லக்கு வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகள் தோறும் தீபஆராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.