சாராயம் குடித்ததால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி தாய் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் :-

செய்திகள்

மயிலாடுதுறையில் சாராயம் குடித்ததால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி தாய் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாராய வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு :-

மயிலாடுதுறை அருகே கடுவங்குடி பகுதியில் பல நாட்களாக சாராய விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த வாரம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலாஜி (32) தொடர்ச்சியாக சாராயம் அருந்தி வந்துள்ளார். அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இந்த நிலையில் சாராயம் குடித்ததால் தான் தங்கள் மகன் உயிரிழந்ததாக கூறி பாலாஜியின் தாய் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையான கடுவங்குடி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். தொடர்ந்து தங்கள் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் இரு பெண்களை கைது செய்து காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஒரு வாரத்திற்க்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *